அப்பாவு: ஜனவரி 9ஆம் தேதி முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
சென்னை: ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் உரை மீது எத்தனை நாள்கள் விவாதம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றார். "இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது கேள்வி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்து வருகிறோம்," என்றார் சபாநாயகர் அப்பாவு.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் வங்கியிடம் கடன்
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஜப்பான் வங்கியிடம் இருந்து ரூ.1,900 கோடி கடன் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்றார். நாட்டில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மகப்பேறு திட்டத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும் இது பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்து வது தொடர்பில் சில தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு: ஐவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை
கோவை: அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பில் கைதானவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஐந்து பேரிடமும் ஒன்பது நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் ஐந்து பேரிடமும் இரண்டாவது நாளாக விசாரணை நீடித்தது. கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஐந்து பேரும் நேரில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயே கேள்விகள் எழுப்பப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
17,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: மதுரையில் இருவர் கைது
மதுரை: கல்லூரி மாணவர்்களுக்கு போதை மாத்திரைகள் விநியோகித்த இருவர் கைதாகினர். அவர்களிடம் இருந்து 17,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் தல்லாகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களுடைய வாகனத்தை சோதனையிட்டபோது, வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, இருவரும் தங்கியுள்ள இடத்தில் சோதனையிட்டபோது, போதை மாத்திரைகள் சிக்கின.

