புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார் கமல். அப்போது இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.
இதையடுத்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுல், கமல் சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், 'மக்கள் நலனுக்காகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் சக இந்தியனாக நடைப் பயணத்தில் பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இருவருக்கும் இடையேயான உரையாடலின்போது இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பேசப்பட்டது.
"மேலும், மக்களிடையே பிளவையும் வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
"மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்," என மக்கள் நீதி மய்யம் மேலும் தெரிவித்துள்ளது.

