விழுப்புரம்: நடுக்கடலில் திடீரென உருவான ராட்சத மேகக்கூட்டம் கடல் நீரை உறிஞ்சியதைக் கண்டு அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
நேற்று முன்தினம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
கரையில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்தபோது, திடீரென்று திரண்ட மேகக்கூட்டம் கடல்நீரைத் தொடும் அளவுக்கு தாழ்வாக இறங்கியது.
இதையடுத்து அந்த மேகக்கூட்டம் கடல்நீரை சுழல்போல் மேலிழுத்தது. மேகக்கூட்டம் நீரை உறிஞ்சும் இந்த நிகழ்வை 'நீர்த்தாரை' எனக் குறிப்பிடுவர்.
சுமார் அரைமணி நேரம் இந்த அதிசய நிகழ்வு நீடித்தது. மீனவர்கள் இக்காட்சியை கைப்பேசியில் படம் பிடித்தனர்.
பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும்போது இதுபோன்று நிகழும் என்றும் ஐரோப்பாவில் இந்த நிகழ்வு பரவலாக நிகழும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் 'டோர்னடோ' என்று பெயர். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிகழும். மரக்காணம் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது இதுவே முதன்முறை எனக்கூறப்படுகிறது," என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

