புதுடெல்லி: அமைதி, நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் செய்வதை விடுத்து அவருக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
அக்கட்சியின் முன்னாள் தலை வரும் எம்பியுமான ராகுல் காந்தி, செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம், பல்வேறு மாநிலங்களைக் கடந்து டெல்லியைக் கடந்த வாரம் சென்றடைந்தது.
டெல்லி, ஹரியானா எல்லைப் பகுதியான குர்கானில் யாத்திரைசென்றவர்கள் முகாமிட்டிருந்த போது, அவர்களின் கன்டெய்னர் வாகன அறைகளில் சந்தேகப் பேர்வழிகள் சிலரது நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் கர்நாடகாவை ஆளும் பாஜக கூட்டணி அரசின் உளவுப் பிரிவு காவலர்கள் என்பது தெரிய வந்ததால் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அதேபோல், டெல்லியில் யாத்திரை சென்றபோதும் பல பகுதிகளில் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் சிக்க நேர்ந்தது.
இந்நிலையில், அவரது பாது காப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராகுலுக்கு அதிமுக்கிய பிரமுகர்களுக்கான 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்கவோ டெல்லி காவலர்கள் அக்கறை காட்டவில்லை என விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநில உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலர், நடைப்பயணம் சென்றவர்களின் கன்டெய்னர் வாகனங்களில் திருட்டுத்தனமாக நுழைந்ததை சுட்டிக்காட்டி உள்ள வேணுகோபால், ஒற்றுமை யாத்திரையில் அரசியல் செய்வதை விடுத்து ராகுலுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களின் இன்னுயிரை நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தியாகம் செய்துள்ளதை நினைவுகூர்ந்துள்ள வேணு கோபால், ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ராகுலின் யாத்திரைக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றார்.
பாதுகாப்பில் குறைபாடு இல்லை
இதனிடையே, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று துணை ராணுவப்படை விளக்கம் அளித்து உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை ராகுல் காந்தி மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது அவரது தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

