செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
819f9875-3525-4582-a2ba-87906095bd86
-

நான்கு தமிழக மீனவர்கள் கைது

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் நால்வரைக் கைது செய்தனர். அத்துடன் அவர்களது இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

நான்கு மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மீனவச் சங்கத்தினர், படகுகளையும் மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

100 நாய்களை வளர்ப்பவருக்கு விருது

மதுரை: மதுரையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 100 நாட்டு இன நாய்களை வளர்த்து வருவதற்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கே.பொத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.சதீஷ். சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், அழியும் நிலையிலுள்ள 100 நாட்டு நாய்களை தன் சொந்த கிராமத்தில் உள்ள நாய்ப் பண்ணையில் பாதுகாத்து வருகிறார்.

இவரிடம் உள்ள 45 நாள்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையும் கோம்பை, மண்டை நாய்க்குட்டிகள் 6,000க்கும் கன்னி, சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் ரூ.8,000 ் முதல் ரூ.10,000 வரையிலும் விற்கப்படுகின்றன. இந்த நாய்களுக்கு 'யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நவீன மரக்கூழ் ஆலை திறப்பு

திருச்சி: திருச்சி மொண்டிப்பட்டியில் நவீன மரக்கூழ் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்காவையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.