சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப்பணம் ஆகியன எந்த ஒரு குழப்பமும் இன்றி மக்களிடம் விநியோகிக்கப்பட வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
எக்காரணம் கொண்டும் தகுதி யான பயனாளிகளுக்கு தொகுப்பை தராமல் திருப்பியனுப்பக் கூடாது எனவும் அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
அத்துடன், தொகுப்புடன் வழங்கப்படும் பச்சரிசி, செங்கரும்பு ஆகியன தரத்துடன் இருப்பதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 9 முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்கும் பணியைத் தொடங்கவேண்டும். இதற்கு ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை டோக்கன் வழங்கவேண்டும். பொங்கல் பரிசு விநியோகத்துக்காக ஜனவரி 13ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டா டப்படவுள்ள நிலையில், அனைத்து மக்களும் இத்திருநாளைச் சிறப் பாகக் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சா்க்கரையும் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆர். காந்தி: வழக்கம்போல் வேட்டி-சேலைகள்
பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்.
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும் வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்மையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஒரு கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனிமேலாவது பத்திரிகைகளைப் பழனிசாமி படிக்கவேண்டும் என அமைச்சர் ஆர். காந்தி கூறியுள்ளார்.

