இருமல் மருந்தால் உயிரிழப்பு:
மருந்து தயாரிப்பு நிறுத்தம்
புதுடெல்லி: நொய்டாவில் செயல்பட்டு வரும் மேரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அண்மையில் குற்றம்சாட்டியது. அத்துடன், இம்மருந்து நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கும் தொடுத்துள்ளது.
இந்நிலையில், "மேரியான் பயோடெக் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மருந்து உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஒலிம்பிக் அகாடெமி
திருச்சி: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சியில் 'ஒலிம்பிக் அகாடெமி' அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற அனைத்துலகப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தவும் தமிழக இளைஞர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகளை வழங்கவும் இந்த அகாடெமி வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு கோடி தடுப்பூசி இலவசம்
புதுடெல்லி: மத்திய அரசுக்கு இரண்டு கோடி கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.410 கோடி மதிப்புள்ள மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்கு பேருந்தில் அவசர பொத்தான்
சென்னை: கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இயங்கும் 1,200 மாநகரப் பேருந்துகளில் அவசர பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது.
பெண்களைத் தவறான முறையில் உரசுவது, இடிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற அத்துமீறல்களில் ஆடவர்கள் ஈடுபடும்போது, இந்தப் பொத்தானை பெண்கள் அழுத்தினால் தொல்லை கொடுப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

