புதுடெல்லி: டெல்லி காவல்துறையில் மெட்ரோ காவல் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி, 45. இவர், தன் 24வது வயதில் இந்தக் காவல்துறை பணியில் சேர்ந்தார்.
இளையராக இருந்தபோது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒரு சமயத்தில் 130 கிலோ எடையை எட்டி, இரவில் தூக்கமின்றி அவதிப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் சர்க்கரை அளவும் ரத்த அழுத்தமும் கெட்ட கொழுப்பின் அளவும் மிகவும் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எடையைக் குறைக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் உடற்பயிற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டார்.
இதுகுறித்து ஜிதேந்திரன் கூறுகையில், "எடையை குறைக்க முடிவு செய்ததும் தினமும் 15 ஆயிரம் அடிகள் (காலடி) நடக்க தீர்மானித்தேன். சில சிறிய உடற்பயிற்சிகளையும் செய்தேன்.
"எனினும், இரண்டு கிலோ மட்டுமே எடை குறைந்தது.
"இதையடுத்து, உடற்பயிற்சியோடு உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றத் தொடங்கினேன். அதிக அளவில் சப்பாத்தி, சாதம் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு வெறும் பழங்கள், காய்கறிகள், சூப் வகைகளாகச் சாப்பிடத் தொடங்கினேன். ஒரே ஒரு சப்பாத்தி, அதிக அளவில் காய்கறிஎன உணவு முறையை மாற்றியதோடு, அதிக தண்ணீரையும் குடித்தேன். முக்கியமாக சர்க்கரையை தவிர்த்துவிட்டேன்.
"ஒரு நாள் நடைப்பயிற்சி, மறுநாள் மெதுவோட்டம் என எட்டு மாதங்கள் கடைப்பிடித்ததால் சரசரவென என் உடல் எடை 46 கிலோ குறைந்துள்ளது. இப்போது மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன். கண்ணாடியைப் பார்க்கும் போது என்னுள் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணரமுடிகிறது," என்கிறார் அவர்.

