தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

2 mins read
30bb83d3-4d0a-41e3-989f-76b6dc905f52
-
multi-img1 of 2

காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, 100, நேற்று காலை காலமானார். தாயின் மறைவுச் செய்தியை அறிந்த பிரதமர் மோடி அவசர அவசரமாக குஜராத்துக்கு வந்தார். அங்கு வீட்டில் வைக்கப் பட்டிருந்த தாயாரின் உடலுக்கு கலங்கிய நிலையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தாயாரின் காலைத் தொட்டு வணங்கினார்.

அவரது தாயாரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்தச் சடங்கில் பிரதமர் மோடி, அவரது சகோதரர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் பலவீனம் அடைந்ததால், இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தன் தாயைச் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத் தளங்களில் வெளியாயின.

இந்நிலையில், நேற்று அதி காலையில் ஹீராபென் மோடி சிகிச்சை பலனின்றி காலமானார்.

தன் தாயாரின் மறைவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது," என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை யைத் தன் தாயாரிடம் இருந்து உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

"தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது," என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மோடியின் தாயார் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிபர் திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர்கள் தமிழிசை சௌந்தர ராஜன், ஆர்.என்.ரவி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இக்கடினமான நேரத்தில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி