கோல்கத்தா: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து கோல்கத்தாவுக்கு வந்து கொண்டிருந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் இரு இந்தியப் பயணிகள் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் காணொளியாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதியப் பட்டுள்ளதாக விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
"இந்தியாவுக்கு வந்த நான்கு இந்தியப் பயணிகள் ஒன்றுசேர்ந்து விமானத்தில் இருந்த மற்றொரு இந்தியப் பயணியை அடித்துத் தாக்கியுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சண்டை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது," என அமைச்சர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிசம்பர் 26 அன்று தாய்லாந்தில் இருந்து கோல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு முன்பு இந்த சண்டை நடந்ததாக தாய் ஸ்மைல் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
பயணி ஒருவர் தனது இருக் கையைச் சாய்த்ததால் இந்த சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. விமானப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பயணியிடம் இருக்கையை நீங்கள் சரிசெய்யாவிடில் உங்களுக்குப் பின்னால் அமரும் பயணிகள் வெளியே செல்வது, வருவது சிரமமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பயணியுடன் சக பயணிகள் சண்டையிட்டுள்ளனர். வாய் வார்த்தை கைகலப்பில் முடிய, விமானத்தில் இருந்த ஊழியர்களும் மற்றவர்களும் தாக்குதலை நிறுத்த முயன்றனர்.
"இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. சண்டையில் சம்பந்தப்பட்ட பயணிகள் மதுபானம் அருந்தவில்லை. அதன்பிறகு பயணத்தில் வேறு எந்த இடையூறும் ஏற்படவில்லை," என விமான நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

