அரசு: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாள்களில் இயக்கப்படும்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில போக்குவரத்துக் கழகம் சுமார் 17,000 பேருந்துகளை இயக்க உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைவர் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
எனினும் இதற்காக ஏராளமானோர் முன்கூட்டியே இருக்கைப் பதிவு செய்துவிடுகின்றனர். தனியார் பேருந்துகளில் பண்டிகை காலத்தில் பயணக்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
இதனால் ஊர் திரும்ப முடியாமல் பலர் தவிப்புக்கு ஆளாக நேரிடுவதால் தமிழக அரசு, கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் சுமார் 17 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் கூறப்படுகிறது.
சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நேற்று போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரையிலான மூன்று நாள்களில் சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிற ஊர்களில் இருந்தும் மூன்று நாள்களில் சுமார் 6,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

