சென்னை: இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த விமானம் ரத்தானது. அதில் பயணம் மேற்கொள்ள இருந்த 159 பயணிகள் தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 194 பயணிகள் இருந்தனர். அவர்கள் தரையிறங்கியதும் சென்னையில் இருந்து 159 பயணிகள் அதே விமானத்தில் கோலாலம்பூர் செல்ல இருந்தனர்.
அந்த விமானம் காலை 10.45 மணிக்கு தரையிறங்கியது. பின்னர் 11.45 மணிக்குப் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலைய பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை, குடிநுழைவு சோதனை ஆகியவற்றை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதைச் சரிசெய்ய இரண்டு மணி நேரமாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் சுமார் ஏழு மணி நேரம் காத்துக்கிடந்தனர். அதன் பிறகும் விமானப் புறப்பாடு குறித்து உறுதியான தகவல் வெளியாகாததால் கோபமடைந்த பயணிகள் பலர், விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு அனை வரும் தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

