சென்னை: தமிழகத்தில் புதிதாக 92,721 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 11.5 விழுக்காடு அதிகம்.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிப்பது இலக்கு.
இந்நிலையில், தமிழகத்தில் முழுமையாக குணமடையும் காச நோயாளிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இவர்களில் 84 விழுக்காட்டினர் முதல் சிகிச்சையிலேயே குணமடைந்ததாகவும் தொடர் சிகிச்சைகள் மூலம் எஞ்சியவர்களும் முழுமையாக குணமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது தனியார் மருத்துவமனைகளில் 21,379 பேரும் அரசு மருத்துவமனைகளில் 71,342 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் மாநிலத்தில் 83,145 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
காசநோய்க்கும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்ததால் காசநோய் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.