குமரி: போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக இனி பள்ளி மாணவர்களும் புகார் அளிக்க ஏதுவாக, பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக குமரி காவல்துறை தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக அங்கு மாணவர்கள் மத்தியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தொடக்க நிலையிலேயே உரிய நடவடிக்கைகளை எடுத்து மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு ஆட்படாமல் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் போதைப்பாக்கு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்படுகின்றனவா என காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
போதைப்பொருள்கள் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்க அரசுப் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
"முதற்கட்டமாக ஐந்து பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வங்கிக் கணக்கும் முடக்கப்படுகிறது.
"புகார் பெட்டிகள் மூலம் மாணவ, மாணவியர் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் புகார் மனு அளிக்கலாம்," என்று கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

