மதுரை: தமிழகத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பது வருத்தம் அளிப்பதாக உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மது விற்பதையும் வாங்குவதையும் கட்டுப்படுத்தி, மது போதை பழக்கத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்பதை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
"மாணவர்களும் 21 வயதுக்குட்பட்டவர்களும்கூட மது அருந்துவதால், மாநிலத்தின் சமூக, பொருளாதாரச் சூழல் கணிசமாகப் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "இளம் தலைமுறையினர் மது அருந்துவது அவர்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் நீண்ட காலத்துக்கு மிகத் தீங்கானது. எனவே மதுவினால் ஏற்படும் அத்துமீறல்களை அடையாளம் கண்டு உடனடியாக அழிப்பது முக்கியம்.
"மது ஒழிப்பை சமூக, பொருளாதார, பொது சுகாதார பிரச்சினையாகக் கருத வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளும் தேவைப்படுகிறது," என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.