சென்னை: மிக விரைவில் சென்னை மாநகரம் முழுவதும் மேலும் 8,189 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளை பழுது பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் மாநில அரசு ரூ.1.1 கோடி அனுமதித்துள்ள நிலையில், புத்தாண்டில் இத்தொகை ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கருவிகள் காவல்துறையின் மூன்றாவது கண் என்று குறிப்பிடப்படுகின்றன என்றும் குற்றங்களை விரைவாகக் கண்டறிய அவை உதவுகின்றன என்றும் காவல்துறை தெரிவித்தது.
"சென்னை மாநகரம் முழுவதும் குற்றங்களைத் தடுக்க இதுவரை 83,226 கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறை அமைத்துள்ளது. இந்நிலையில் மேலும் 2,730 இடங்களில் 8,189 கேமராக்களைப் பொருத்த
திட்டமிட்டுள்ளது.
"இந்தப் புதிய கேமராக்கள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் அமைக்கப்பட உள்ளன. அவை அனைத்துமே குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் வசதிகள் கொண்டவை ஆகும். மேலும், போக்குவரத்து ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க உதவும் வசதி கொண்டவை," என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி குறிப்பிடுகிறது.
ஏற்கெனவே சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 60,997 கண்காணிப்பு கேமராக்கள் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய தனித்துவமிக்கவை என்றும் அவை காவல்துறையின் கண்காணிப்புப் பணியில் பெரிதும் துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெண்கள், குழந்தைகள், பொது இடங்களில் சிறந்த பாதுகாப்பை வழங்கவும் பொது மக்களிடையே சிறந்த பாதுகாப்பு கிடைக்கும் உணர்வை ஏற்படுத்தவும் கண்காணிப்புக் கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
"பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் காவல்துறைக்கு பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்," என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.