சென்னையில் தாமதமாக தரையிறங்கிய விமானங்கள்

1 mins read
f53ad4ba-1218-4f4f-8440-a62d82686504
-

சென்னையில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் மோசமாக இருந்ததால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கலை எதிர்நோக்கின.

சிங்கப்பூர், குவைத், மும்பை யில் இருந்து வந்த விமானங்கள் ஓடுபாதை சரியாகத் தெரியாததால் குறிப்பிட்ட நேரத்துக்குள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்ததாகவும் இதனால் 30 நிமிடங்களுக்குப் பிறகு தாமதமாக தரையிறங்கிய தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலம் முழுவதும் பரவலாக பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பாக வட மாவட்டங்களில் இந்தப் பனிமூட்டம் அதிக அளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குளிரைப் பொறுத்த அளவில், சென்னை மக்கள் ஊட்டியில் இருப்பதுபோல் உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் நோக்கி வீசும் குளிர்காற்றின் அலைதான் இதற்குக் காரணம் என்றும் சென்னையில் இம்மாதம் 16ஆம் தேதிவரை குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே, வேலூரிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றதாகவும் கூறப்படுகிறது.