வேலூர்: அரசாங்கப் பள்ளிகளில் சில மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், மாணவர்கள் தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களைத் தவிர்த்து, பள்ளிச் சூழலுக்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்யுமாறு மாண வரிடம் அறிவுறுத்தப்பட்டது.
கண்டபடி மாணவர்களுக்கு முடி அலங்காரம் செய்யக்கூடாது என கடைக்காரர்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அரையாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் விதவிதமான சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
அவர்களைப் பார்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி அவர்களைக் கண்டிப்பது, அறிவுரை வழங்குவது என்பது தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்.
துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து முடித்திருத்தும் கடைக்கு அனுப்பிவைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
தனியார், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளில் 8-12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.