வேடசந்தூர்: திண்டுக்கல் வாணியம்பாடி பகுதியில் ரூ. 5 கோடி உண்டியல் பணத்தைக் கொள்ளை அடிக்கச் சென்ற அதிபயங்கர கொள்ளைக்கூட்டத் தலைவியை தமிழக காவல்துறை கூண்டோடு கைது செய்து இருக்கிறது.
இது பற்றி அதிகாரிகள் பல்வேறு விவரங்களை கூறினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாலையூரைச் சேர்ந்த சீனிவாசன், 40, என்ற நிலச்சொத்து அதிபர், அனைத்துலக மனித உரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச் செயலாளரான தீனதயாளன் என்பவரிடம் ரூ. 4 லட்சத்தை முன் பணமாகக் கொடுத்து புதிய இடம் வாங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், அனைத்துலக மனித உரிமைகள் கழகத்தின் மதுரை மாவட்ட செயலாளராக இருக்கும் மதுரை உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணியிடம் சீனிவாசன் பற்றி தீனதயாளன் பலவற்றையும் தெரிவித்தார்.
கொள்ளைக்கூட்டத் தலைவி யான ஜோதி, சென்னையில் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்தபோது பதவியில் இருந்து அகற்றப்பட்ட செல்வக் குமார் என்ற குற்றவாளியுடன் சேர்ந்து, 16 பேர் கும்பலுடன் சீனிவாசன் வீட்டில் புகுந்து 43 பவுன் தங்க நகைகளையும் ரூ.18 லட்சத்தையும் அள்ளிச் சென்றார்.
சீனிவாசன், அது பற்றி புகார் கொடுத்தார். இந்த நிலையில், வாணியம்பாடி பகுதியில் ரூ. 5 கோடி உண்டியல் பணத்தைக் கொள்ளையடிக்க தன் படையுடன் ஜோதி சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் காவல்துறையிடம் வசமாக சிக்கினார்.
மொத்தம் எட்டு பேர் பிடிபட்டு இருக்கிறார்கள். இதர எட்டு பேர் தேடப்பட்டு வருகிறார்கள். பணம், நகை, கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

