சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை நடந்தது.
ஆனால், யாரோ சிலர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குச்சீட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டனர்.
வாக்குச்சீட்டுகள் மாயமானதை அடுத்து சங்கத் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 முதுநிலை, இளநிலை செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர்கள், வாக்குச்சீட்டைப் பெறுவதற்கான கியூ-ஆர் கோடு அடையாள அட்டை கட்டமைப்புப் பிரச்சினையால் சரியாக வேலை செய்யவில்லை என்றும் தேர்தல் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். வழக்கறிஞர்கள் சிலர் மொத்தமாக கியூ-ஆர் கோடு அடையாள அட்டைகளை அள்ளிச் சென்றுவிட்டனர்.
இதற்குள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டைக் கைப்பற்றி வெளியே எடுத்துச் சென்றனர்.
அவற்றின் விளைவாக தேர்தலை நடத்த முடியவில்லை. வாக்குச்சீட்டுகள் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

