செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

பழனி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிக்கை

பழநி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை குரல் கொடுத்துள்ளது. அந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறினார்.

கருவறை, வேள்விச் சாலை, குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்களையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதனை வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி பழனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு தயாரித்து கார் மீது வீசிய சிறுவர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டை பகுதியில் யூடியூப் ஒளிவழியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து ஒரு வாகனம் மீது வீசி சோதித்த நான்கு பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் பிடிபட்டனர்.

தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் மீதமிருந்த வெடிமருந்துகளை எடுத்துவந்து ஒரு வெள்ளை தாளில் சிறிய கூழாங்கற்களைச் சேர்த்து பதித்து வெடிகுண்டு தயாரித்து அதை அவர்கள் வீசினர்.

சிறார்கள் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதர இரண்டு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

14 வயது சிறுமி பலாத்காரம்:

60 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை: டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்த 60 வயது ஆடவர், 2018ஆம் ஆண்டில் தன் உறவினரான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டாக்சி ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ரூ.45,000 வேட்டி, சேலை கருகின

மதுரை: மதுரையில் அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.45,000 மதிப்புள்ள வேட்டி, சேலைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு மோப்ப நாய்கள் சேர்ப்பு

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு, பன்னாட்டு விமானநிலைய பாதுகாப்புப் பணியில் வெடிகுண்டு களைக் கண்டுபிடிக்கும் பிரிவில் பெல்ஜியம் நாட்டின் 'பெல்ஜியம் மெலினோஸ்' இனத்தைச் சேர்ந்த இரண்டு மோப்ப நாய்க் குட்டிகள் சேர்க்கப்பட்டன. அவற்றை கேக் வெட்டி அதிகாரிகள் வரவேற்றனர். 'பைரவா', 'வீரா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நாய்க்குட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை பயிற்சிப் பள்ளியில் 6 மாதப் பயிற்சியை முடித்து உள்ளன. படம்: தமிழக ஊடகம்

புதிய சித்த மருத்துவக் கல்லூரி

திருச்சி: தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று மத்திய ஆயுஷ் துணை அமைச்சர் டாக்டர் மகேந்திரா முன்ச்பாரா தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த தேசிய சித்த மருத்துவ தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அந்தக் கல்லூரி விரைவில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் என்றார்.

டெங்கி ஒழிப்பு தீவிரம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கிக் காய்ச்சல் தலைதூக்கி இருப்பதை அடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இதையொட்டி, 803 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.