திண்டுக்கல்: பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையை வெளிநாடுவாழ் தமிழர்களும் ஆர்வத்துடன் கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து லண்டனுக்கு கரும்பு, மஞ்சள் கொத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை, நிலக்கோட்டை பகுதியில் இருந்து கோவை அனைத்துலக விமான நிலையம் வழியாக மஞ்சள் கொத்து, கரும்புகள் ஐக்கிய அரபு சிற்றரசின் ஷார்ஜா நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்நிலையில், இப்போது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி அனைத்துலக விமான நிலையம் வழியாக கரும்பு, மஞ்சள் கொத்துகள் அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு லண்டன், பாரிஸ், துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரும்புகளை ஏற்றுமதி செய்துள்ள விவசாயி சின் ராஜ் கூறுகையில், "கடந்த ஆண்டும் வெளிநாடுகளுக்கு கரும்பு ஏற்றுமதி செய்தேன். இவ்வாண்டும் 'ஆர்டர்'கள் கிடைத்ததால் ஏற்றுமதி செய்கிறேன். கரும்புத் தோகையை அகற்றி, நீளத்துண்டு களாக வெட்டி பெட்டியில் அடைத்து அனுப்புகிறேன்.
"தோகையுடன் கரும்பை வாங்க விரும்புபவர்களுக்கு தோகையுடன் சேர்த்து கரும்பை அனுப்புகிறேன். இதனுடன் மஞ்சள் கொத்துகளையும் அனுப்புகிறேன். விமானத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 500 கிலோ கரும்பை அனுப்பி வருகிறேன்," என்று அவர் கூறினார்.

