செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

764 கோயில்களில் தினமும்

85,000 பேருக்கு அன்னதானம்

சென்னை: சென்னை சூளை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள், ெகாளத்தூர் சோமநாத சுவாமி கோயில் உள்பட பத்து கோயில்களில் அன்னதானத் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 764 திருக்கோயில்களில் மதிய வேளை அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளோம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 85,000 பேர் இந்த அன்னதானத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்," என்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு கூறினார்.

சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டி

ஆலந்தூர்: முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் முதல்முறையாக மார்ச் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளதாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சென்னையை அடுத்த படப்பையில் இப்போட்டி நடத்தப் பட உள்ளது. ஸ்டாலின் பெயரிலான ஒரு காளை உள்பட 501 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 சிலைகள் ஒப்படைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், ஒரு வெண்கலச் சிலை ஆகியவற்றை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தனர். இந்நிலையில், மூன்று சிலைகளையும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக அதிகாரி சிவ சத்திய வள்ளியிடம் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஒப்படைத்தார்.

697 சுற்றுலாப் பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த கப்பல்

தூத்துக்குடி: பிரான்சில் இருந்து சுற்றுலாக் கப்பல் ஒன்று 697 வெளிநாட்டுப் பயணிகள், 386 பணியாளர்களுடன் தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்தடைந்தது. பகமாஸ் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற அந்த சுற்றுலாக் கப்பலில் 413 அறைகள், நீச்சல் குளம், நூலகம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தூத்துக்குடி துறைமுகம் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர்களின் முறைப்படி மங்களவாத்தியம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.