செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கண்விழிப் பதிவு முறை மூலம் பொருள் வழங்க நடவடிக்கை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவு மூலமாக பொருள்களைப் பெற இயலாத மாற்றுத் திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் உள்ளிட்டோர் கண்விழிப் பதிவு மூலமாக பொருள்களைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நியாயவிலைக் கடைகளில் இனி எடையை உறுதிப்படுத்த பாக்கெட்டுகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

போராட்டம் நடத்திய தாதியர் கைது

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு உடையை அணிந்து 12வது நாளாக தாதியர் நேற்று விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்திய தாதியரை ராஜரத்தினம் மைதானம் அருகே தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் கைது செய்தனர்.

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோரின் இன்னுயிரைத் தாங்கள் காப்பாற்றி உள்ளதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தரப் பணியை வழங்கும்படியும் போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர் கோரி வருகின்றனர்.

ஆளுநரை திரும்பப்பெறும்படி வழக்கறிஞர்கள் கோரிக்கை

சென்னை: ஆளுநரை மத்திய அரசு உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில் அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை யில் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி நடந்துகொண்ட விதம் குறித்து அதிபர் திரௌபதி முர்முவிடம் விளக்கம் கூறி, மனு அளித்துள்ளதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

ஒருமனதாக நிறைவேறிய சேது சமுத்திரத் திட்டத் தீர்மானம்

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சேது சமுத்திரத் திட்டத் தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக, அதிமுக கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

"தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாத திட்டமாக இத்திட்டம் விளங்கும்," என ஸ்டாலின் கூறினார்.