தாம்பரம்: சொகுசு காரில் வந்து ஏறக்குறைய 1,000 ஆடுகளைத் தனது கூட்டாளிகளுடன் திருடிய பெண் இப்போது காவலர்களின் பிடியில் சிக்கியுள்ளார்.
முன்பு திருடிய இடத்திலேயே மீண்டும் அவர் திருட வந்த போது பிடிபட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதி யான தாம்பரம், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடு கள் தொடர்ந்து திருட்டுப் போவதாக அங்குள்ள காவல் நிலையத்துக்குப் புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து ஆடுகள் களவு போன பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தபோது, சொகுசு காரில் வந்து ஆடு திருடிய பெண் உள்பட மூவர் பிடிபட்டனர்.
பம்மல் ஆதாம் நகரைச் சேர்ந்தவர் சின்னப்பொன்னன். இவரது வீட்டில் இருந்த 15 ஆடு கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டுப் போனதை அடுத்து சங்கர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே, கடந்த வாரம் அதே கும்பல் மீண்டும் சின்னப் பொன்னன் வீட்டில் மீதமிருந்த ஆடுகளைத் திருட வந்தபோது, சத்தம் கேட்டு சின்னப்பொன்னன் எழுந்து வந்ததை அடுத்து கும்பல் காரில் தப்பியது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காரில் வந்து ஆடு திருடிய முடிச்சூர் சரோஜினி, ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார், பொரிக்கடை உரிமையாளர் பாரூக் ஆகியோ ரைக் கைது செய்தனர்.
மூவரும் முதலில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஆடுகளைத் திருடி விற்று வந்துள்ளனர். லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் பின்னர் சொகுசு கார் வாங்கி கைவரிசை காட்டி உள்ளனர்.
அவர்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட ஆடுகளைத் திருடி இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

