சென்னை: திருச்சியில் உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அனுமதியின்றி இந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், உய்யக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் உய்யக்கொண்டான் திருமலைப் பகுதியில் ஏறக்குறைய 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
அந்தக் குடியிருப்புகள் 54 விழுக்காடு அளவுக்கு விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்றும் அதனை இடிக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை தாமதமின்றி உடனடியாக இடிக்க உத்தரவிட்டனர்.
இந்தக் கட்டடத்தைக் கட்டு வதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அதுகுறித்து ஆறு வாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செயல்படும் அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பணிகளுக்கு மாற்றவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், கட்டடத்தின் உரிமையாளர் அந்தக் குடியிருப்பில் வீடுகளை வாங்கியவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

