சென்னை: கொசு மருந்து தெளிக்கும் பணிக்காக ஆளில்லா சிறிய வானூர்திகளைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக ஆறு வானூர்திகள் வாங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில், 3,312 தற்காலிக, நிரந்தரப் பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளது மாநகராட்சி. இதற்காக 68 வாகனங்கள், புகைபரப்பும் இயந்திரங்கள், கைகளில் எடுத்துச் செல்லும் கொசு மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப்புழு நாசினி தெளிப்பதற்காக ஆறு வானூர்தி இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சென்னை மாநகரில் கொசுத் தொல்லைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிக விரைவில் மேலும் சில வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினர். நேற்று முன்தினம் ஆளில்லா வானூர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

