'தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது'
சென்னை: போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிப்பதுதான் நடப்பு ஆட்சியின் லட்சியம் என்று சட்டப்பேரவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் கஞ்சா புழக்கத்தை குறைக்கவும் கஞ்சா கடத்தலைத் தடுக்கவும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல்வர் பட்டியலிட்டார்.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக ஆட்சி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது என்றும் ஆபரேஷன் கஞ்சா நடவடிக்கைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
"போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதுவரை 50,875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11.59 லட்சம் கிலோ போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12,294 வழக்குகள் பதிவாகி உள்ளன.
"உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு, வங்கிக் கணக்குகள் முடக்கம், சொத்துகள் முடக்கம், உறுதிமொழி பத்திரம் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு பல சோதனைச் சாவடிகளைக் கடந்து கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருள்களை மத்திய புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், நடப்பு ஆட்சியில் போதைப்பொருள்கள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால்தான் ஊடகங்களில் அவை தொடர்பான செய்திகள் வெளிவருவதாகச் சுட்டிக்காட்டினார்.
தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி: மசோதா தாக்கல்
தமிழகத்தில் இனி தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.
இது தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஆள்சேர்ப்பு முகமைகள் மூலம் நடத்தப்படும் அனைத்து நேரடிப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு முறையான அரசாணை பிறப்பித்தது.
அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக புதிய சட்ட மசோதாவை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

