திமுக முன்னாள் எம்பி கொலை வழக்கில் அவரது தம்பி கைது
சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கொலை செய்யப்பட்டதில் அவரது இளைய சகோதரருக்கும் தொடர்புள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைதாகி உள்ளார். முன்னாள் எம்பி மஸ்தான் அண்மையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. எனினும் காவல்துறை மேற்கொண்ட விசாரணையின்போது அவரது உறவினரும் கார் ஓட்டுநருமான இம்ராஜ் பாஷா என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில், மஸ்தான் கொலையில் அவரது சகோதரர் ஆதம் பாஷாவுக்கு தொடர்புள்ளது அம்பலமானது. பூர்வீக சொத்து தொடர்பான தகராறு, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை ஆகியவை காரணமாக தன் நண்பர்கள் உதவியோடு ஆதம்பாஷா தனது அண்ணனை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் கைதானார்.
நீலகிரியில் நீடிக்கும் கடுங்குளிர், பனிப்பொழிவு: முடங்கிய மக்கள்
நீலகிரி: கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. இதே வேளையில், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா போன்ற பகுதிகளில் இதே வெப்ப நிலை பதிவானது என்றும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. பல பகுதிகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. மேலும் சில நாள்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் நாகராஜன் மாரடைப்பால் மரணம்
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் மாரடைப்பால் காலமானார். அண்மையில் உடல் நலக்குறைவால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு நியமித்திருந்தது.
பிரதமர் வேட்பாளர் ராகுல்: ஸ்டாலின் அறிவிக்க காங்கிரஸ் விருப்பம்
சென்னை: அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி களமிறங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மூலம் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சித் தலைமை விரும்புவதாகத் தெரிகிறது. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் இம்மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. அந்த நிறைவு விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வரும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் அதைப் பரிசீலித்து வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
எச்.ராஜா: ஆளுநர் செயல்பாடுகளில் உள்நோக்கம் ஏதும் இல்லை
திருச்சி: தமிழக ஆளுநர் எந்தவித உள்நோக்கமும் இன்றிச் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மாநில அரசை குறைகூறி முதல்வருக்கும் அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் சட்டப்பேரவை யில் ஆளுநர் நாகரிகமாக நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த உண்மைக்குப் புறம்பான வாசகங்களை அவர் நாகரிகமாக தவிர்த்ததாகவும் இதற்காக அவருக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும் என்றும் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், ஆளுநரை எதிர்த்தால் திமுக அரசு பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார் ராஜா.

