சென்னை: மதுரை விமான நிலையம் (படம்) இனி 24 மணி நேரமும் விமானச் சேவைகளை வழங்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் அதிகம் பலன் அடைவர்.
தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு மணி நேர சேவையை அளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சு இக்கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது. நாடு முழுவதும் மேலும் நான்கு விமான நிலையங்களுக்கு இதேபோன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை மனதிற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை வழங்கும்.
இதற்கிடையே, திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி வரும் ஜூன் மாதம் முடிவடையும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு தற்போது ரூ.951 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து புதிய முனையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின்னர் திருச்சி விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2,900 பயணிகளைக் கையாள முடியும் என்றும் புதிய முனையத்துக்கான பணிகள் 85% முடிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

