சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சேவல் சண்டையின்போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டா என்று உறுதி அளித்தால் சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சேவல்களைத் துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் இடம்பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மீறினால் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.