அவனியாபுரம்: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப் புகழ்பெற்ற முப்பெரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, யாருக்கும் முதல்மரியாதை இன்றி சமத்துவமுறையில் தொடங்கியது.
முதல் கட்டமாக மதுரை அவனியாபுரத்தில் பெரும் பாதுகாப்புகள், நிபந்தனைகளுக்கு இடையே நேற்று காலை 7மணி முதல் நடந்த அந்த வீர விளையாட்டில் ஏறக்குறைய 800 காளைகளும் 318 வீரர்களும் களமிறங்கினர்.
பதினொன்று சுற்றுகளாகப் போட்டி நடந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் வெவ்வேறு வண்ணச் சீருடை கொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு சுற்றிலும் காளைகளை வெற்றிகரமான முறையில் அடக்கும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் வரை அடுத்த சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். ஜல்லிக்கட்டு வளாகம் முழுவதும் கண்காணிப்புப் படச்சாதனங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றன.
காளைகளுக்குத் தீங்கிழைப்பதைத் தடுக்கவும் சிறந்த காளைகளையும் வீரர்களையும் தேர்வு செய்யவும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
அவனியாபுரத்தில் இறுதி நிலவரப்படி 45 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள் 16 பேர், காளை உரிமையாளர்கள் 20 பேர், பார்வையாளர்கள் ஒன்பது பேர் அவர்களில் அடங்குவர்.
சிறந்த காளைக்கும் வீரருக்கும் கார், இரு சக்கர வாகனம், தங்க நகைகள், கட்டில், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களைப் பெற்றனர்.
ஒன்பதாவது சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் களம் கண்டிருந்தன. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் 23 காளைகளை அடக்கி முன்னணியில் இருந்தார். 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். 14 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
அவர்களுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற விஜய்க்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார், முதல்வர் ஸ்டாலின் சார்பில் கிடைத்தது.
அவரிடம் தோற்றுவிட்ட காளைகளில் ஒன்று அழகுபேச்சி என்ற பள்ளி மாணவிக்குச் சொந்தமானது. தனக்குக் கிடைத்த பரிசுகளைத் தான் அடக்கிய காளைகளின் உரிமையாளர்களுக்கே வழங்கி பெரும் பாராட்டைப் பெற்ற விஜய், மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்.
2வது பரிசு பெற்ற கார்த்தி விளைாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சார்பில் இரு சக்கரவாகனத்தைப் பரிசாகப் பெற்றார்.
மொத்தத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மனநிறைவாக முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக இன்று பாலமேடு, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

