திருப்பூர்: ஒரு கோயிலில் திருடச் சென்ற ஆசாமி, அங்கு தன்னைத் தடுத்த கோயில் பூசாரியைக் கொலை செய்து உடலை எரித்தார். ஆனால் அடுத்த கோயிலில் அந்த ஆசாமி வசமாகச் சிக்கினார்.
திருப்பூர் வெங்கமேடு-ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார் கருப்பராயன் கோயிலைச் சேர்ந்த பூசாரி சுப்ரமணி,72, என்பவரின் உடல் அந்தக் கோயிலின் பின்புறத்தில் கருகிக் கிடந்தது.
அதன் தொடர்பில் வடமாநில தொழிலாளர்களையும் முந்தைய கோயில் கொள்ளையர்களையும் காவல்துறை விசாரித்து வந்தது.
இந்நிலையில், திருப்பூர் காங்கேயம் சாலை விஜயாபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பாளையம் புத்துக்கண் நாகாத்தம்மன் கோயிலில் உண்டியல், சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தாலிச் சங்கிலி திருட்டுப் போனது.
இதன் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சதீஷ்குமார், 30, என்ற நபரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
பூசாரியைக் கொலை செய்து உடலை எரித்ததையும் அந்த நபர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த நபர், இதர பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

