செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
36f51f35-96e1-4d05-a6e5-c4a9fc721f0d
-

ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

எட்டயபுரம்: தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 6,500 ஆடுகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளன.

எடைக்கு ஏற்ப ஓர் ஆடு ரூ.7,000 முதல் ரூ.35,000 வரை வாங்கப்பட்டது. மொத்தம் ரூ.6 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடலூர் அருகே வடலூரில் சனிக்கிழமை ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

குப்பையில்லா நகர்கள் இலக்கு

சேலம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களையும் குப்பையில்லா நகரமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சேலத்தில் கண்காட்சி ஒன்றைத் திறந்துவைத்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இதற்காக இந்தூர், சட்டீஸ்கர் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தப்பட்டு உள்ளதாகவும் அடுத்த ஓராண்டில் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிக பயணிகள்: தமிழகம் முதலிடம்

சேலம்: இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை வாலாங்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ள படகு இல்லம் ஒன்றைப் பார்வையிட்டுப் பேசிய அமைச்சர், கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 1.2 மில்லியன் பேர் வந்ததாகவும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 110 மில்லியன் பேர் வந்ததாகவும் இந்தியாவில் அதிகம் பேர் சுற்றிப் பார்த்த சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் கூறினார்.

தமிழக சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இன்னும் ஓராண்டுக்குள் இரண்டு மடங்காகும் என்றாரவர்.

47 ஆடுகளைக் கொன்ற நாய்

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் கிராமத்தில் நாராயணன் என்பவர் நாய்களை வளர்த்து வருவதாகவும் அவரின் வளர்ப்பு நாய் மூன்று சம்பவங்களில் இதுவரை 47 ஆடுகளைக் கடித்துக் கொன்றுவிட்டதாகவும் காவல்துறையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஆகக் கடைசியாக நாராயணனின் வளர்ப்பு நாய், வீரம்மாள், 30, என்பவரின் பத்து ஆடுகளைக் கடித்துக் கொன்றுவிட்டதாகவும் இதர பல ஆடுகளைக் காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ஆடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

10ஆம் நூற்றாண்டு நடுகல்

தர்மபுாி: அரூர் அருகே சந்தப்பட்டி ஏரிக்கரையில், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்து நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த தர்மபுரி அரசுக்கலைக் கல்லூரி வரலாற்று உதவிப் பேராசிரியர் சந்திரசேகர், சங்க காலம் முதல் தகடூர் பகுதியை ஆண்ட அதியமான் மரபினர், பிற்கால சோழர் காலத்தில், அவர்களுக்குத் திரை செலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக மாறியதாகக் கூறினார்.

எனவே, இது சோழர் காலத்தில் இப்பகுதியை நிர்வகித்த சிறு தலைவரைச் சித்திரிப்பதாக இருக்கலாம். அவ்வீரனுடன் சேர்ந்து ஒரு பெண் உருவம் இடம்பெற்று உள்ளதால், இது சதி நடுகல்லாகவும் இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.