மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டி வரும் நிலையில், மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடு முட்டியதில் அரவிந்த் ராஜ் என்ற வீரர் உயிரிழந்தார்.
இச்செய்தி வீரரின் உறவினர்களையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கல் திருநாளான நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், மாட்டுப்பொங்கல் நாளான நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்தன.
ஒன்பது சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. 335 வீரர்களில் துணிச்சலாக நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழ ரசன் முதலிடம் பிடித்தார். அவ ருக்கு முதல்வர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது.
19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி இரண்டாவது பரிசையும் 15 காளைகளை அடக்கிய பாலமேடு ராஜா மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.
இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளையும் திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை இரண்டாவது பரிசையும் வென்றன.
பார்வையாளர் உயிரிழப்பு
இதனிடையே, திருச்சி மாவட்டம், சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த், 25, என்ற பார்வையாளரைக் காளை முட்டியதில் அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒன்பது காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் (படம்) காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சள் மலை ஆற்று மைதானத் திடலில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பல காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டிப் பறக்கவிட்டன. ஒன்பது காளைகளைப் பிடித்து மூன்றாம் இடத்திலிருந்த வீரர் அரவிந்த் ராஜ் 10வது காளையைப் பிடிப்பதற்கு ஆயத்தமானபோது, சீறிப்பாய்ந்து வந்த காளை அவரது வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் கீழே சரிந்து விழுந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் மயக்கமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

