சென்னை: தமிழ், இலக்கியம், சமூகத்திற்காகப் பெரும் பங்காற்றி வருபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நேற்று விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் திருநாளன்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுபோல், இவ்வாண்டும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய விழாவில், திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட ஒன்பது பெருந்தலைவர்களின் பெயர்களில் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி, 2022ஆம் ஆண்டிற்கான அண்ணா விருது உபயதுல்லா, காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவன், திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா, பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், தேவநேயப் பாவாணர் விருது முனைவர் இரா.மதிவாணன் ஆகியோருக்கு ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

