திருச்சி: ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளிடம் இன்றுமுதல் 22ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்புப் புலனாய்வுத் துறை காவலர்கள் அழைப்பாணை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 பேருக்கும் தனித்தனியாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனையின் முடிவில் உண்மையான குற்றவாளி யார் என்பது குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் வெளிச்சத்துக்கு வரும். இந்தப் பரிசோதனை அறிக்கை இம்மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி, கொடூரமாக கொல்லப் பட்டார்.
இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவைச் சார்ந்த காவலர்கள் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இவ்வழக்கை தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பில் முக்கிய ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன் உள்ளிட்ட 13 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.

