திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். பொங்கலை முன்னிட்டு வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகளின் கூட்டம் விமான நிலையத்தில் அதிகமாக இருந்த நிலையில், வெடிகுண்டு புரளியால் பயணிகளிடம் சிறிது பதற்றம் நிலவியது. அதன்பின்னர், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வர, மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அனைத்துலக புத்தகக் காட்சி
சென்னை: சென்னையில் முதல்முறையாக அனைத்துலக புத்தகக் காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தொடங்கிவைத்தார். இந்தக் காட்சி நேற்று முதல் நாளை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் இம்மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில், அனைத்துலக புத்தகக் காட்சியும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அனைத்துலக அளவிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
5 மணி நேரம் பம்பை இசைத்து
111 கலைஞர்கள் உலகச் சாதனை
செஞ்சி: செஞ்சி அருகே விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 111 பம்பை இசைக் கலைஞர்கள் நோபல் உலகச் சாதனைக்காக 5 மணி நேரம் தொடர்ந்து பம்பை இசைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 111 பம்பை இசைக் கலைஞர்கள் 5 மணிநேரம் இடைவிடாது பம்பை இசைத்தனர். நோபல் உலகச் சாதனை புத்தக நடுவர்கள் அரவிந்த் லட்சுமி நாராயணன், வினோத், பரணிதரன் ஆகியோர் சாதனைப் பதிவைக் கண்காணித்தனர். சாதனையின் முடிவில் பம்பை இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் மஸ்தான் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
களைகட்டிய சுற்றுலா மையங்கள்
கொடைக்கானல்: ெபாங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டின.
சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்தினர், உறவினருடன் திரண்டிருந்த ஏராளமானோர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடினர். கொடைக்கானலில் தற்போது நிலவும் குளு குளு பருவநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு பல வண்ண பூக்களும் பூத்துக் குலுங்கும் நிலையில், சுற்றுலாத் தலங்களைக் காண பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்ற ஒரே கட்டண முறையை கொடைக்கானல் வனத்துறை அமல்படுத்தி உள்ளது.
ரூ.20 கோடியில் வள்ளலார் காப்பகம்
சென்னை: தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் இந்த திட்டத்தின் மூலம் பலனடையும் என நம்பப்படுகிறது.

