சென்னை: அதிமுகவில் உள்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில், அனைவரையும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை விரைவில் தாம் சந்தித்துப் பேச இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு சந்திக்கச் செல்லும்போது நிச்சயம் செய்தியாளர்களிடம் விவரம் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
"தேர்தலுக்கு முன்னர் அதிமுகவினர் அனைவரும் இணைவோம். திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அனைவரும் இணைய வேண்டும். அது நிச்சயம் நடக்கும்," என்றார் சசிகலா.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் மறைமுக மோதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரியாதபோது அது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார் சசிகலா.

