செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு தீவிர பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இதுதான் நான் இந்திய தலைமைக்கு விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஐக்கிய அமீரக சிற்றரசு முக்கிய பங்காற்ற முடியும். எனவே பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்," என பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மேலும் கூறியுள்ளார்.

காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சென்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியபோது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தலைமையாசிரியர் போல் நடந்து கொள்ளும் ஆளுநர்: கெஜ்ரிவால் காட்டம்

புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான தம்மிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, பள்ளித் தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கிடையாது என்றார். டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பயிற்சிக்காக பின்லாந்து அனுப்ப அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அம்மாநில ஆளுநர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்தே அவரைக் கடுமையாகச் சாடினார் முதல்வர் கெஜ்ரிவால்.

ஒன்பது மாநில தேர்தல்களில் வெற்றிக்கு பாடுபட கட்சியினருக்கு பாஜக உத்தரவு

புதுடெல்லி: ஒன்பது மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவினர் வெற்றியைக் குறிவைத்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இதை வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுள் ஏற்கெனவே ஐந்து மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது," என்றார் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்.