சென்னை: பந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலை யத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு மூன்று மடங்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ள போதிலும், போராட்டக்காரர்கள் அதை ஏற்கவில்லை என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய விமான நிலையத்துக்காக பரந்தூரில் உள்ள 12 கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 4,500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட பல நீர்நிலைகள் அழிக்கப்படும் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தங்களுக்கு அளிக்கப்படும் மும்மடங்கு இழப்பீட்டைக் கொண்டு, மூன்று மடங்கு நிலங்களை வாங்கித் தர இயலுமா என அரசுத்தரப்புக்கு கேள்வியும் விடுத்துள்ளனர்.
"இங்கு விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் நம்பியே மக்கள் வாழ்கின்றனர். எனவே இறுதிவரை போராடுவோம்," என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

