அதிமுக பொதுக்குழு வழக்கு: எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல்
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இரு தரப்பினரும் நேற்று எழுத்து பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் விசாரணை அமர்வு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி அந்த வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் 87 கிலோ புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல்
சேலம்: காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது சேலத்தில் 87 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சேலம், களரம்பட்டி பகுதியில் காவல்துறையினர் ஒரு வீட்டில் சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் இம்மூவரும் பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள் களைக் கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்து வந்தனர்.
தங்கம் கடத்தல்: ஆடவர் கைது
சென்னை: துபாயில் இருந்து கடத்தி் வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பயணி மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த ஆடவர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பறிமுதலான கடத்தல் தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.49.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆடவர் கைதானார்.
ஈரோட்டில் அனுமதியின்றி சேவல் போட்டி நடத்திய 12 பேர் கைது
ஈரோடு: காவல்துறையின் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைதாகினர். நேற்று முன்தினம் கவுந்தப்பாடி அருகே நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண வந்தவர்கள் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற நிகழ்வுகளின்போது சேவல்களைத் துன்புறுத்தக் கூடாது, போட்டி நடக்கும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சேவலின் காலில் கத்தியைக் கட்டக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் உள்ளன. எனினும் அவற்றைக் கடைப்பிடிக்காமல், போட்டி நடத்தப்பட்டதால் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
நீதி கேட்டு வாகனப் பயணம்
திருச்சி: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்து தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாடியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் நீதி கேட்டு தமிழக விவசாயிகள் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை வாகனப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. நியாயமான காரணங்களுக்காகப் போராடும் விவசாயிகள் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்வது தவறு எனவும் அச்சங்க நிர்வாகிகள் கூறினர்.

