சென்னை: அண்மையில் கோவையிலும் கர்நாடகாவிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பழனி பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிஎஃப்ஐ அமைப்பில் இருந்து மேலும் இருவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பழனி புறநகர்ப் பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வரும் ஐம்பது வயதான முகமது கைசர் பிஎஃப்ஐ அமைப்பில் மதுரை மண்டலத் தலைவராக இருந்து வந்தார்.
அண்மையில் கோவையில் கார் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது தொடர்பில் இவருக்கு முக்கியத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு கடந்த இரு நாள்களாக முகமது கைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிவாசல் உட்பட பல இடங்களுக்கு அவரை நேரில் அழைத்துச் சென்று கேள்விகள் கேட்ட அதிகாரிகள், முகமது கைசர் அளித்த பதில்களைப் பதிவு செய்துகொண்டனர்.
நேற்று மூன்றாவது நாளாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
நேற்று மேலும் இரு பிஎஃப்ஐ நிர்வாகிகளை நேரில் வரவழைத்து புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது என்றும் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

