சென்னை: தமிழ் மொழியிலான சிறந்த படைப்புகள், உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட உள்ளது.
இந்தப் பணிக்காக மூன்று கோடி ரூபாய் மானியமாக (Translation grant) வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மூன்று நாள்கள் நடைபெற்ற அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியில், 30 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் எழுத்தா ளர்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யும் வகையிலான புத்தகங்களைக் காட்சிப்படுத்தி இருந்தனர்.
அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில் புத்தக அரங்குகளைப் பார்வை யிட்டு ஸ்டாலின் பேசினார்.
"தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டு உள்ளோம். பல்வேறு மொழிகளிலும் உள்ள நூல்களைத் தமிழில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம்.
"இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேகமாக நடைபெற்று வருகின்றன.
"எப்போது தரமான நூல்கள் மொழி பெயர்க்கப்படுகிறதோ அப்போது நமது மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும்.
"புதிய இலக்கியங்கள் மட்டுமன்றி, புதிய சிந்தனைகளும் புதிய சொற்களும் கிடைக்கும்.
"காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால்தான் தமிழ் மொழியின் காலமும் நீடிக்கும்.
"தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச்செல்லும் வகையில், தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யும் வகையில் தமிழக அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும்," என்று கூறினார்.
தமிழ் மொழியில் இருந்து பிற இந்திய, உலக மொழிகளிலும் பிற மொழிகளில் இருந்து தமிழி லும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ள தாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.