ஓசூர்: ஓசூர் அருகே தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 250 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் அங்கிருந்த கைப்பேசி கோபுரங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமா ரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மறியல் காரணமாக ஓசூர்- தர்மபுரி சாலையில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஐந்தாவது தொழிற்பேட்டை அமைப் பதற்காக 3,800 ஏக்கா் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், கைப்பேசி கோபுரங்களில் ஏறி நின்று போராட்டம் நடத்தியவர்களும் கீழே இறங்கி வர மறுத்துவிட்டனா்.
இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை பயனின்றிப் போனதால், செல்லக்குமார் உள்ளிட்ட அனைவரும் கைது செய் யப்பட்டனர்.
இதுகுறித்து, செய்தியாளர் களிடம் பேசிய செல்லக்குமார் கூறுகையில், ``விளைநிலங்களைக் கையகப்படுத்தும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்தியா முழுவதும் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்காக சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதியின்றி கையகப்படுத்தக்கூடாது என்றும் நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் 80 விழுக்காடு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே நிலத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது," என்று கூறினார்.

