40 அடி உயரத்தில் மின்விளக்கு அமைத்த ஊழியர் உயிரிழப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்குச் சொந்தமான ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற படப்பிடிப்புத் தளம் உள்ளது. கடந்த சில நாள்களாக சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்பட படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது. இதற்காக அதிகாலையில் 40 அடி உயரத்தில் மின் விளக்கு அமைத்தபோது, குமார், 47, என்ற ஊழியர் உயிரிழந்தார். சென்னை சாலிசிராமத்தைச் சேரந்தவரான குமார் குறித்து கவரப்பேட்டை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும்
சென்னை: தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும் என சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை மக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது களப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளையரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி வைகோ கோரிக்கை
செங்கல்பட்டு: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த கோகுல்ஸ்ரீ, 17, என்ற இளையர் சந்தேகப்படும் விதத்தில் அண்மையில் உயிரிழந்தது தொடர்பில், ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இளையர் கோகுல்ஸ்ரீயின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்திட ஆணையம் அமைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனநோய், தூக்க மருந்துகளை விற்பதற்கு கட்டுப்பாடு
சென்னை: மனநோய், தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்கும் வகையில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்யவேண்டும் என்று மருந்துக் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களும் மனநோய், தூக்க மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை கடிதமின்றி விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
500 பள்ளிகளில் காலை உணவு
சென்னை: காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் இம்மாத இறுதியில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்தக் காலை சிற்றுண்டித் திட்டம் பெரும் பயன் நல்கி வருகிறது.

