திருச்சி: பிரதமர் மோடி உறுதிஅளித்தபடி பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
இந்தியாவின் படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் 'ரோஸ்கர் மேளா' திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார்.
அதன் ஒரு பகுதியாக மூன்றாம் கட்டத்தில் 71,000 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று ரயில்வே, சுங்கத்துறை, கலால் துறை, விமானத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறையைச் சேர்ந்த 129 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
அதன்படி கடந்த அக்டோபர் 22ஆம் தேதி 75,000 பேருக்கும், அதன் பின்னர் நவம்பர் 22ஆம் தேதி 71,000 பேருக்கும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் என்றார்.
"மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71,000 பேருக்கு பிரதமர் பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியுள்ளார்.
"இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாகப் பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்குத் திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் உறுதியளித்தபடி பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம்," என்று அமைச்சர் சொன்னார்.

