நாம் தமிழர் கட்சி சார்பில்
பெண் வேட்பாளர்
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியில் மகளிர் பாசறை செயலாளராக உள்ள கோமதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரே இடைத்தேர்தலிலும் போட்டியிட இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தண்டவாளத்தில் ஆண் சடலம்
பணகுடி: பணகுடிக்கும் வள்ளியூருக்கும் இடையே கலந்தபனை ஊருக்குக் கிழக்கே ரயில் தண்ட வாளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பணகுடி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிணைவறைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர் யார், எப்படி இறந்தார். யாராவது அவரைக் கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
'நாங்களும் போட்டியிடுகிறோம்'
ஈரோடு: அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம் என்று அறிவித்துள்ளார். "இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டுத் தருவோம். அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன்," என்று ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

