சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நேற்று காலை காலை அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரான இளங்கோவன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
முன்னதாக தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்டு உள்ளேன் என்றும் இளங்கோவன் கூறியிருந்தார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடமும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் இளங்கோவனையே வேட்பாளராக அறிவிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
"ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். அவர்களது விருப்பத்துக்கு அடிபணிந்து நான் போட்டியிடு கிறேன். ஈரோடு கிழக்குத் தொகுதி யில் ஏற்கெனவே திமுகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டதற்கு நன்றி.
"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை காரணமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம்," என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதன் பிறகு அங்கிருந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து அவர் ஆதரவு கோரினார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.
அப்போது, "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பெரியாரின் பேரன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 38 ஆண்டு காலத்திற்குப் பிறகு தேர்தல் களம் காண்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உயர்மட்ட முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ள இவர், தந்தை பெரியாரின் பேரன் ஆவார். இவர், பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வி.கே.சம்பத்- சுலோச்சனா சம்பத்தின் மகன் ஆவார். இவரது மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
மனதில் பட்டதை பேசக்கூடி யவர் இவர். திமுகவை முன்பு விமர்சித்ததால் அதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேட முயற்சி செய்யலாம் என்பதால் இந்தத் தேர்தலில் அவர் போட்டி யிட தயக்கம் காட்டியதாக நம்பப்படுகிறது.
ஆனால் திமுகவும் காங்கிரஸ் மேலிடமும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை களத்தில் இறக்க விரும்பின.

