சென்னை: ரயில்வே விதிமுறைகளை மீறும் வகையில், ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே பாதையைக் கடப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே விதிகளின்படி கைப்பேசியில் பேசியபடி ரயில் பாதையைக் கடப்பது, ரயிலின் படிகளில் நின்றபடி பயணம் செய்வது, புகைப்படம், செல்ஃபி எடுக்கக் கூடாது. இதனை மீறுவோர் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரயில் பாதையைக் குறுக்கு வழியில் கடக்க நினைக்காமல், சுரங்கப்பாதை அல்லது மேம்பாலங்களைப் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகத் தினர் எச்சரித்துள்ளனர்.

